Tuesday, December 17, 2013
வேலூர், டிச.17–
வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, எலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அமலா. இவர் தனது கணவர் சுரேஷ்குமார் மற்றும் 8 மாத குழந்தையுடன் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம் அமலா மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
செங்கல்பட்டு தாலுகா, கரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை நான் காதலித்து கடந்த 2012ம் வருடம் கலப்பு திருமணம் செய்து கொண்டேன். இப்போது என் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில் நான் காதல் கலப்பு திருமணம் செய்ததால் எலத்தூர் கிராமத்தில் வசிக்கும் என் பெற்றோரை, அங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து பஞ்சாயத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும், இல்லையென்றால் கம்பத்தில் கட்டி வைத்து அடிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கு பயந்து என் தந்தை ரூ.20 ஆயிரம் கட்டியுள்ளார். மீதிப்பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் எங்கள் வயலுக்கு சென்ற மின்சாரம் மற்றும் மோட்டார் ஒயர்களை அறுத்து என் பெற்றோரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதையறிந்து நான் எலத்தூர் சென்று நியாயம் கேட்க முயன்றேன், ஆனால் என்னையும் ஆபாசமாக பேசி, ஊரைவிட்டு வெளியேற வில்லையென்றால் உயிரோடு கொளுத்தி விடுவதாக மிரட்டினர்.
இது குறித்து போலீசில் புகார் செய்ய நினைத்த போது, என் தந்தை மீது பொய் புகாரை பாணாவரம் போலீசில் கொடுத்துள்ளனர். இதனால் என் தந்தை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டார். எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அமலா கூறியிருந்தார்.
புகார் மனுவை பெற்ற எஸ்.பி. அலுவலக ஊழியர்கள் மனுவை அரக்கோணம் டி.எஸ்.பி.க்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
நன்றி : மாலைமலர்