Monday, December 16, 2013



நவம்பர்   28 , 2013

திண்டுக்கல் மாவட்டத்தில், அருந்ததியர் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட கரியாம்பட்டி கிராமத்தில், கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் அங்கு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் எவிடென்ஸ் மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கரியாம்பட்டி - நடுப்பட்டி. இக்கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று மாலை 3.30 மணியளவில் சுமார் 200 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, பெட்ரோல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த தலித் மக்களை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர். தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இக்கொடிய வன்முறையில் 8 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன, 27 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த தொலைக்காட்சி, பீரோ, மிக்சி உள்ளிட்ட பொருட்கள் அடித்து சூறையாடப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் பெருமாள் (36), நாகராஜ் (34), சுப்பிரமணி (28) ஆகிய 3 தலித்துகள் காயமடைந்தனர். மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் நிலக்கோட்டை காவல்நிலையத்தில் 5 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 23 தலித்துகளும், 51 சாதி இந்துக்களும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறை மற்றும் திண்டுக்கல் கிளைச் சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் கடந்த 25.11.2013 அன்று சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

கரியாம்பட்டி - நடுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தலித் இளைஞர்கள் நாகராஜன் (19), சக்திவேல் (23) ஆகியோர் சாதி இந்து பெண்ணை கிண்டல் செய்ததாக கூறி சுமார் 200க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் 24.11.2013 அன்று மாலை 3.30 மணியளவில் தலித் குடியிருப்பு பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். அவ்வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, பெட்ரோல் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தலித் மக்களை மிரட்டியுள்ளனர். சாதிய ரீதியாக இழிவாகப்பேசி கொண்டே அங்கிருந்தவர்களை தாக்கியும் உள்ளனர். சாதி இந்து வன்கொடுமை கும்பலின் இக்கொடிய தாக்குதலைக் கண்டு அச்சமடைந்த தலித்துகள் அப்பகுதியிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச்சென்றுள்ளனர். அவ்வன்கொடுமை கும்பல் தலித் வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதில் 5 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாக்கப்பட்டது. மூன்று வீடுகள் பகுதி அளவில் தீ வைப்பு சம்பவத்தால் சேதமடைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 10 வீடுகளின் ஒடுகளையும் வீட்டின் பொருட்களையும் அடித்து முற்றிலும் சேதப்படுத்தியுள்ளனர். 17 வீடுகளின் ஒடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இத்தாக்குதலில் 3 தலித்துகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் சுமார் 30 நிமிடம் நடந்துள்ளது. இக்கொடிய தாக்குதல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் முன்னிலையில் நடந்திருக்கிறது.

கரியாம்பட்டி - நடுப்பட்டி கிராமத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற சாதிய ரீதியான தாக்குதல்கள் கடந்த ஒரு வருட காலமாகவே நடந்து வருகிறது.

 கடந்த 26.02.2012 அன்று தலித்துகளான திரு.பெத்தன் (27), திரு.கணேசன் ஆகியோரை சாதி இந்துக்கள் செருப்பால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்ததற்காக பெத்தன் மீது மறுபடியும் தாக்குதல் நடந்தது. இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் குற்றஎண்.67/2012 பிரிவுகள் 341, 355, 506(1) மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

கடந்த 19.04.2012 அன்று தலித் பெண் காளியம்மாள் மீது சாதி இந்து வன்கொடுமை கும்பல் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது இதுகுறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் குற்றஎண்.108/2012 பிரிவுகள் 294(b), 341, 324 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

கடந்த 21.07.2013 அன்று தலித் இளைஞர்கள் கண்ணன், பிரசாந்த், பாலு ஆகிய மூவரும் ஒண்டிவீரன் படம் போட்ட டிசர்ட் அணிந்து சென்றதற்காக 5 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல், டிசர்ட்டை கழட்ட சொல்லி கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் குற்றஎண்.137/2013 பிரிவுகள் 341, 294b), 324, 506(2) இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு ùய்யப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

 இதனைத் தொடர்ந்து புகார் கொடுத்ததனால் ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள் கடந்த 22.07.2013 அன்று இரவு 9.00 மணியளவில் தலித் குடியிருப்புக்குள் உள்ளே புகுந்து 4 வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தலித் பெண்களையும் ஆபாசமாக பேசி வன்முறையில் ஈடுபட்டனர். இதுகுறித்து 23.07.2013 அன்று நிலக்கோட்டை காவல்நிலையத்தில் 140/2013 பிரிவுகள் 147, 148, 336, 324, 307 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சாதி இந்துவான சின்னதுரை, வீராச்சாமி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது சாதி இந்துக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலித்துகள் மீது நிலக்கோட்டை காவல்நிலையத்தில் குற்றஎண்.141/2013 பிரிவுகள் 147, 148, 294(b), 336, 323, 307 இ.த.ச. மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதமடைதல் கீழ் சுமார் 83 தலித்துகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதனால் அதிர்ச்சிடையந்த 500க்கும் மேற்பட்ட தலித்துகள் கடந்த 02.10.2013 முதல் 07.10.2013 வரை கரியாம்பட்டி - நடுப்பட்டி கிராமத்திலிருந்து வெளியேறி சங்கால்பட்டி கிராமத்திற்குள் குடிபுகுந்தனர். இதனால் திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தலித் மக்கள் அரசு அலுவலர்களிடம் இப்பகுதியில் தனி காவல்நிலையம் அமைக்க வேண்டும், தங்களுக்கென்று தனி பள்ளிக்கூடம் வேண்டும், குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இவற்றை நடைமுறைப்படுத்துவதாக அரசு தரப்பில் உறுதியளித்தனர்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் இயக்குனர் திரு.வெங்கடேசன் அவர்கள் கடந்த 15.10.2013 அன்று கரியாம்பட்டி - நடுப்பட்டி கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து விசாரணை நடத்தினார். திரு.வெங்கடேசன் அவர்கள் நடுப்பட்டி கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும், அடிப்படை வசதிகளும் அரசு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையும் முன்வைத்தார்.

ஆனால் இதுவரை கரியாம்பட்டி - நடுப்பட்டியில் உள்ள தலித் மக்களுக்கு அரசு எவ்வித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றவில்லை. தற்போது இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று 27.11.2013 அன்று எரிந்து போன 6 வீடுகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணத்தை அரசு வழங்கியுள்ளது. சேதமடைந்த 31 வீடுகளுக்கு தலா ரூ.500 கொடுத்துள்ளனர். இதுதான் அரசின் அதிபட்ச நிவாரணமாக உள்ளது. இப்பகுதியில் தலித் குடியிருப்பு பகுதிக்குள் யார் உள்ளே வருகிறார்கள்? செல்கிறார்கள்? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராவை அரசு பொருத்தியுள்ளது.

இப்பகுதியில் உள்ள தலித்துகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இத்தகைய தாக்குதலில் ஈடுபடுகிற குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு உதவ முற்படுகிற இயக்கங்களை அச்சுறுத்தும் விதமாக இதுபோன்ற கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையம் இப்பகுதிக்கு நேரடியாக வருகை தந்து தலித் மக்களுக்கு நீதி கிடைக்க அரசிற்கு உரிய பரிந்துரை வைத்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சில சாதிய துவேச சக்திகள் வேண்டுமென்றே தலித் இளைஞர்கள் சாதி இந்து பெண்ணை கிண்டல் செய்தார்கள் என்று பொய்ப்புகார் கொடுத்துள்ளனர். சாதி இந்து தரப்பில் தலித் இளைஞர்கள் மீது ஈவ்டீசிங் செய்ததாக 23.11.2013 அன்று புகார் கொடுத்துள்ளனர். அன்றே முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டும் சாதி இந்துக்கள் ஏன் தலித்து குடியிருப்பிற்குள் உள்ளே புகுந்து இக்கொடிய தாக்குதலில் ஈடுபட வேண்டும்? ஆகவே திட்டமிட்டே இத்தகைய வன்முறையில் சாதி இந்துக்கள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அப்பகுதி பதட்டமான பகுதி இரண்டு தரப்பிலும் தொடர்ச்சியாக பதட்டமும், மோதலும் உருவாகிக் கொண்டிருக்கிற பகுதி. இந்நிலையில் காவல்துறையினர் உரிய முறையான பாதுகாப்பினை வழங்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தலித் குடியிருப்பு பகுதிக்குள் யார் உள்ளே வருகிறார்கள் என்பதை கண்காணிக்க கேமரா பொருத்தும் காவல்துறையினர் அவர்கள் மீது நடந்த கொடிய அத்துமீறலை தடுக்காமல் இருந்ததன் பின்னணி என்ன? ஆகவே திண்டுக்கல் மாவட்ட போலீசாரும் இக்கொடிய அத்துமீறலுக்கு மறைமுகமாக துணைபோயுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

பரிந்துரைகள்

தலித்துகள் மீது கொடிய தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்ப்பட வேண்டும்.

தலித்துகள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும்.

 தலித் வீடுகளை தீ வைத்து கொளுத்திய குற்றத்திற்காக வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளில் மீது தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(2)(3) மற்றும் 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

தீ வைத்து கொளுத்திய குற்றவாளிகளுக்கு தலா 5 இலட்சம் அபராதம் விதிக்க அரசு உத்தரவிட வேண்டும்.

எரிந்து போன வீடுகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமும், வீட்டினை புதுப்பித்து கட்டித்தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.1 இலட்சம் நிவாரணமும் சேத மதிப்பீட்டினையும் அளித்திட வேண்டும்.

கிராமத்திற்கு சீல் வைத்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டு யாரையும் உள்ளே விட அனுமதி மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதுபோன்ற விதிமுறைகளை ரத்து செய்து அப்பகுதிக்குள் அனைவரும் உள்ளே சென்றுவர அரசு அனுமதியளிக்க வேண்டும்.

ஏ.கதிர், செயல் இயக்குனர், எவிடன்ஸ்.

நன்றி : அந்திமழை

இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -