Saturday, December 21, 2013
பெரம்பலூர், டிசம்பர் 22, 2013..நரிக்குறவர் இனத்தவர்களை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்த்தமைக்காக மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து பெரம்பலூரில் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
நரிக்குறவர் என்கிற குருவிக்கார இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மாநில அரசு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, மத்திய அமைச்சரவையிலும், மக்களவையிலும் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ஆர். சுப்ரமணியன் தலைமையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, காந்தி சிலை எதிரே தொடங்கிய பேரணி காமராஜர் வளைவு, பாலக்கரை வழியாகச் சென்று பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை எதிரே நிறைவடைந்தது. முன்னதாக, காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நறிக்குறவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கே. ஜெயசங்கர், ஏ. கணேசன், மாநில அமைப்பாளர் கே. ஜல்கேசன், மாநில துணை செயலர் பி.என். நம்பியார், எஸ். பொன்னையன், சுதிர், காந்தராவ், பொறுப்பாளர்கள் ஏ. வேல்முருகன், ஆர். ரகு, ஏ, ரவிச்சந்திரன், எம். சங்கர், எம். மணிகண்டன், கணேஷ், எம். தர்மதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.