Monday, December 30, 2013
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு நடுவில், கிறிஸ்தவ தலித் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை நினைவுகூராமல் இருக்க முடியாது. கடந்த மாதம் தமிழகத்தில் வெளிவந்த இரு செய்திகள்.
முதல் செய்தி: கிறிஸ்தவத்திலிருந்து இந்துவாக மாறிய தலித் ஒருவர், பட்டியலினத்தவர் என்று சாதிச் சான்றிதழ் கோரினார். தகவல் அறியச் சென்றிருந்த வருவாய்த் துறையினர் ஸ்தல சோதனைக் குறிப்பில், சம்பந்தப்பட்டவரது வீட்டுப் பூஜை அறையில் இந்துக் கடவுளரின் படங்களோ விக்ரகங்களோ இல்லை எனக் கூறி சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்டது. அவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்துக் கடவுளரின் படங்கள் இல்லாததனால் மட்டுமே ஒருவர் இந்து மதத்தவரல்ல என்று கருத முடியாதென்றும், இந்து மதத்தைச் சேர்ந்தவர் யார் என்பதற்குச் சரியான வரையறை இல்லை என்றும், நம்பிக்கை அடிப்படையிலேயே ஒருவரது மதத்தை நிர்ணயிக்க முடியும் என்றும் தீர்ப்பளித்தது.
இரண்டாவது செய்தி: மற்றொரு கிராமத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பட்டியல் இனத்தவர் ஒருவரின் இறப்புக்குப் பின், கிராமப் பொதுக் கல்லறையில் அவரது உடலைப் புதைக்க முற்பட்டபோது, சாதி இந்துக்கள் அந்த முயற்சி யைத் தடுத்தனர். மதம் மாறியிருப்பினும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், பட்டியல் இனத்தவருக்கான தனிக் கல்லறையில் மட்டுமே அவரது உடலைப் புதைக்க வேண்டுமென்று சண்டித்தனம் செய்தனா். பலத்த எதிர்ப்புக்கு இடையே வருவாய்த் துறையினரின் தலையீட்டால் இறந்தவரின் உடல் பொதுக் கல்லறையில் புதைக்கப்பட்டது. அந்தப் பகுதி தலித் கிறிஸ்தவர்கள், விளையப்போகும் எதிர்வினை என்னவாயிருக்கும் என்ற அச்சத்தில் இன்றும் வாழ்ந்துவரும் அவலநிலைதான் உள்ளது.
மதம் மாறியும் அதே நிலை
மக்கள் மட்டுமின்றி, மன்னர்களும் மதம் மாறியதும், மன்னரை வசப்படுத்திய பின் மதவாதி கள் மாற்று மதத்தினரைக் கொடுமைப்படுத்திய வரலாறுகளும் இங்கு உண்டு. பொருளாசையாலோ அருளாசியாலோ மதமாற்றம் ஏற்பட்டிருப்பினும் அவற்றால் சாதிக் கட்டுமானத்தை உடைக்க முடியவில்லை. மனுதர்மப்படி நான்கு வர்ண சாதிக் கட்டுமானத்துக்கு வெளியே அ-வர்ணசாதியின ராக்கப்பட்டு ‘பஞ்சமர்’ என்றே தலித் மக்கள் அழைக்கப்பட்டனர். கிராமச் சமூகத்தில் ‘தீண்டத் தகாதவர்’ என்று ஊருக்கு வெளியே வைக்கப்பட்டு, சமூகக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியல் இனத்தினரிடையே மதமாற்றம் அவர்களது கொடுமைகளுக்கு முடிவுகட்டும் என்ற எண்ணம் 17-ம் நூற்றாண்டுக்குப் பின் வந்த கிறிஸ்தவ மிஷனரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. கத்தோலிக்கக் குருமார்களின் சுவிசேஷ சேவை யினால் பட்டியல் இன மக்களுக்குக் கிடைத்திராத கல்வியும், ஒருசிலருக்குக் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளில் வேலைவாய்ப்பும் கிட்டின. ஆனால், வலுவான சாதிக் கட்டுமானத்தில் மதம் மாறிய பின்னரும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்தன. தேவாலயங்களிலும் தனி இருக்கை, கல்லறைகளில் வேறுபாடு என்ற சமூகக் கொடுமைகள் தொடர்கதைகள் ஆயின.
பட்டியல் இனத்தவரின் வேதனை
1950-ம் வருடத்திய இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருமுன் சென்னை மாகாணத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி (கம்யூனல் ஜி.ஓ.) வேலைவாய்ப்பில் அனைத்துச் சாதியினருக்கும் மதத்தினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. சாதி, மத இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதென்று சம்பகம் துரைராஜன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், அரசியலமைப்புச் சட்டம் முதல்முறையாகத் திருத்தப்பட்டு, சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்ட 341-வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரைக் கலந்தாலோசித்த பின் அந்த மாநிலத்துக்கான பட்டியல் இன சாதிகளின் பட்டியலைப் பொது அறிவிக்கை மூலம் வெளியிட அதிகாரம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்கவோ தவிர்க்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கியதுதான் பட்டியல் இன சாதியினரின் வேதனை.
குடியரசுத் தலைவர் வெளியிட்ட பட்டியல் இன சாதிகளில் உள்ளோர், இந்து அல்லது சீக்கிய மதங்களை விட்டோடினால் அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மறுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. சாதிக் கட்டுமானத்துக்கு வெளியே வைக்கப்பட்ட தலித்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தாலும், அவர்கள் மதம் மாறுவதைத் தடுக்கவே இந்தச் சட்டம் என்பது சொல்லாமலே விளங்கும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சிற்பியும், தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராகவிருந்தவருமான டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் 3.10.1954-ல் அகில இந்திய வானொலியில் முக்கியமான உரையொன்றை ஆற்றினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று வார்த்தைகளில் தனது சமூகத் தத்துவம் அடங்கியுள்ளது. இந்த வார்த்தைகளை பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து தான் கடன்பெறவில்லை என்றும், தன்னுடைய தத்துவகுரு புத்தபிரானிடமிருந்து அவற்றைப் பெற்றதாகவும் தன்னுடைய தத்துவத்துக்கு ஒரு குறிக்கோளுண்டு என்றும் அதன்படி மக்களை புத்த மதத்துக்கு மாற்ற விழையும் பணி தனக்கு உண்டென்றும் பகிரங்கமாக அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 14.10.1956 அன்று நாக்பூரில் இரண்டரை லட்சம் ஆதரவாளர்களுடன் புத்த மதத்தைத் தழுவினார். காங்கிரஸ் அமைச்சரவையில் பெரும் பொறுப்பு வகித்த ஒருவர், இந்த நாட்டின் மிகப் பெரிய மதத்தின் அவலங்களைத் தோலுரித்துக் காட்டி வேற்று மதமொன்றுக்கு மாறியது அதுவே முதலும் கடைசியும். தீட்சை பூமியில் அவராற்றிய உரையில், தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட தொடர் கொடுமைகளைப் பட்டியலிட்டதோடு, பொருளாதார லாபங்களைவிட சுயமரியாதையே தலித் மக்களுக்கு முக்கியமென்றும் அவர்களது போராட்டம் சுயமரியாதை என்ற கௌரவத்தைப் பெற விழைவதே என்றும் அறிவித்தார்.
பல லட்சம் தலித் மக்கள் புத்த மதத்தைத் தழுவிய பின்னரும், மத்தியில் பதவி வகித்த காங்கிரஸ் அரசு மத மாற்றத்தால் பட்டியல் இன மக்கள் இழக்கும் சலுகைகளைத் தடுக்க முன்வரவில்லை. 1990-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டின்போது அவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கியபோதுதான் ஆட்சியாளர்களி்ன் மனசாட்சி உறுத்தப்பட்டு நாடாளுமன்றச் சட்டத் திருத்தத்தின் மூலம் புத்த மதம் தழுவிய தலித் மக்களுக்கும் பட்டியல் இனத்தவருக்கான சலுகைகள் உண்டு என்று அறிவிக்கப்பட்டது.
கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாமியத்துக்கோ மாறிய தலித் மக்களுக்குப் பட்டியல் இன மக்களுக்கான சலுகைகள் மறுக்கப்படும் அநீதியின் தொடர்ச்சிதான் இந்தக் கட்டுரையின் முதலில் கூறப்பட்ட இரு செய்திகள் கூறும் உண்மை.
பட்டியல் இன மக்கள் இந்துக்களாயினும் பிற மதத்தைத் தழுவியோராயினும் அவர்களுக்கு இழைக்கப்படும் சாதிக் கொடுமைகள் ஒன்றே. சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்பட்டிருப்பினும் பாதிக்கப் பட்டவர் கிறிஸ்தவராயிருந்தால் அது குற்றமாகக் கருதப்படாதென்பது எவ்வளவு பெரிய கொடுமை.
சூசை வழக்கும் வல்சம்மா பால் வழக்கும்
1985-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சூசை என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி பட்டியல் இன மக்களுக்கான சலுகையை மதத்தின் அடிப்படையில் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.என்.பகவதி மதமாற்றத்துக்குப் பிறகு சாதிக்கொடுமைகள் தொடர்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தென்னிந்தியாவில் மதமாற்றத்துக்குப் பின்னரும் அந்த மக்கள் தீண்டத்தகாதவர்களாகவே கருதப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் மிகச் சொற்பமாகவே கூறப்பட்டுள்ளன என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். 1996-ல், மதம் மாறிய பட்டியல் இனத்தவர் ஒருவரின் சாதிச் சான்றிதழ்பற்றி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ராமசாமி, வல்சம்மா பால் என்ற வழக்கில் தென்னிந்தியாவில் எவ்வாறு பட்டியல் இன மக்கள் மதம் மாறிய பின்னரும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை மிகத் தெளிவாகத் தனது தீர்ப்பில் பதிவுசெய்துள்ளார்.
சூசை தொடுத்த வழக்குக்குப் பின், கத்தோலிக்கக் குருமார்கள் சபை அன்றைய பிரதமரை சந்தித்துச் சட்டத் திருத்தத்தின் மூலம் மத அடிப்படையிலான வேறுபாட்டை நீக்கக் கோரினர். அதன் பின் 1996-ல் காங்கிரஸ் அரசு சட்டத் திருத்தத்தை மக்களவையில் கொண்டுவந்தபோதும் முழு மனதுடன் அதை நிறைவேற்ற முன்வரவில்லை. பா.ஜ.க-வினரின் ஆதரவை எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சியின் மசோதா மக்களவையின் கால முடிவுக்குப் பின் மரணித்துவிட்டது.
மறுபடியும் 2004-ம் ஆண்டு மத அடிப்படையில் தலித் மக்களுக்கான சலுகை வழங்கப்படுவதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டு இன்றும் நிலுவையில் உள்ளது. 2011-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்குபற்றிய தகவல்களைப் பொதுமக்கள் கவனத்துக்காக இணையத்தில் வெளியிட உத்தரவிட்டதோடு மட்டுமின்றி, தேசியப் பட்டியல் இன மக்களுக்கான ஆணையத்தின் கருத்தையும் கேட்க அறிவிப்பு கொடுத்தது.
டெல்லி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்ததை எதிர்த்து நடந்த எழுச்சியைக் கண்ட அன்றைய தலைமை நீதிபதி அல்டாமீஸ் கபீர் அந்தப் போராட்டத்தில் தானும் பங்குபெற ஆசைப்பட்டதாகக் கூறியதோடு, குற்றவாளிகள் மீதான வழக்கு துரித விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஒரு ஆண்டுக்குள் தரப்பட்டது. ஆனால், தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் கிறிஸ்தவ-தலித் மக்களுக்கான சமூக நீதி கோரிய வழக்கு 10 ஆண்டுகளாக இன்னும் தொடர்வது வேதனையே!
இந்தச் சூழ்நிலையில் வள்ளலார் நினைவுக்கு வருகிறார் : சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி (ஆறாம் திருமுறை)
- சந்துரு,ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக விமர்சகர்
நன்றி :: தி இந்து