Monday, December 30, 2013
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் (பி.சி.ஆர். ஆக்ட்) தமிழ் நாட்டில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்திடும் வகையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலேயே தலித் மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தலித் மக்கள் தொகை 21 சதவீதமாக உள்ளது.
இவ்வளவு அதிகமான தலித் மக்கள் வாழும் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2002 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அந்த வழக்குகளில் தண்டனை பெற்றோர் விவரங்கள் தெரிய வந்துள்ளன.
3.5 சதவீதம் மட்டுமே:
கடந்த 10 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 11 ஆயிரத்து 629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 406 வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 3.5 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தலித் மக்களை பாதுகாக்கும் வகையில் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் கூர்மை பெற்று வருகிறது.
காரணம் என்ன?
இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கூறியதாவது:
இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் அது நடைபெறுவதில்லை. கண்ணுக்குத் தெரிந்த பெரும் அழிவுகள் ஏற்படும் சம்பவங்களில் மட்டுமே போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
அத்தகைய சம்பவங்களில் கூட போலீஸார் சரியாக விசாரணை நடத்துவதில்லை. முறையாக விசாரணை நடத்தி தலித் மக்களுக்கு கொடுமை இழைத்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற அக்கறையுடன் போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதில்லை. இதன் காரணமாகவே வழக்குகள் தோல்வி அடைகின்றன.
அரசு கவனம் செலுத்த வேண்டும்
ஆகவே, தமிழக அரசு இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். தலித் மக்களைப் பாதுகாப்பதற்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முழுமையாக அமல் படுத்தப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான சட்டத்தின் ஆட்சி நடை பெறுகிறது என்பதும் உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். .
இந்நிலையில் இந்த வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தலித் அல்லாத பிற சமுதாய மக்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், இதன் காரணமாகவே தண்டனை அளிக்கப்படும் வழக்குகள் குறைவாக உள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
எப்படியிருப்பினும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 400 வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது இந்த சட்டத்தை சரியாக அமல்படுத்துவதில் காவல் துறையினரிடம் போதிய செயல்பாடு இல்லை என்ற விமர்சனத்தை எளிதில் ஒதுக்கித் தள்ளி விட இயலாது.
- வி.தேவதாசன்
செய்தி :: தி ஹிந்து