கரூர் அருகே தீண்டாமை கொடுமைக்கு எதிராக நேரடி நடவடிக்கை கே.பாலபாரதி, தலைவர்கள் பங்கேற்பு : கோரிக்கை ஏற்பு
Monday, December 23, 2013
கரூர், டிச. 23 -
கரூர் அருகே உள்ள பள்ளமருத பட்டி அருந்ததிய மக்களுக்கு அரசு திட்டங்களை அமுலாக்க விடாமல் அப்பகுதியில் உள்ள சாதி ஆதிக்க சக்திகள் தொடர்ந்து சாதிய கொடுமைகளை நிகழ்த்துகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை யில் பள்ளமருதப்பட்டி அருகே நேரடி இயக்கம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் சாய்வு நாற்காலி அமைக்க அரசு தரப்பில் ஒப்புக் கொண்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தலைமையேற்று கே.பாலபாரதி எம்எல்ஏ பேசியதாவது-கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பவித்திரம் கிராமம், பள்ளமருதபட்டியில் 100 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் வேறு சாதியினர் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தலித் மக்கள் மீது தொடர்ந்து சாதி ஆதிக்க சக்திகள் தீண்டாமை கொடுமைகளை நடத்திவருகின்றனர். தலித் மக்கள் குடிநீர் வேண்டி பொது தொட்டியில் குடிநீர் எடுத்தால் சில ஆதிக்க சக்தியினர் தடுத்து வருகின்றனர். இதனால் தங்களது குடிநீர் தேவையை பூர்த்திசெய்திட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைத்திட கோரிக்கை விடுத்து பவித்திரம் ஊராட்சி நிர் வாகமும் அதற்கான பணிகளை தொடங்கி சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பொழுது அதனை ஆதிக்க சக்தியினர் தடுத்து நிறுத்தி யுள்ளனர். தலித் மக்கள் வசிக்கும் பகுதி பேருந்து நிறுத்தத்தில் அமர்வதற்கு சிமெண்ட் சாய்வு நாற்காலி போடப் பட்டுள்ளது. இதில் தலித் மக்கள் அமர்வதை தாங்கிக் கொள்ள முடி யாத சாதி ஆதிக்க சக்தியினர் எங்கள் முன்னால் நீங்கள் எப்படி உட்காரலாம் என தலித்மக்களுக்கு விடுத்த மிரட்டல் காரணமாக சிமெண்ட் சாய்வு நாற்காலியை பேருந்து நிறுத்தத்திலிருந்து அகற்றிவிட்டனர்.
மேலும் அரசுப் பணி களை செயல்படுத்தவிடாமல் அதற்குஎதிராக செயல்படும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை மாறாக தலித் மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலி யுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தும் ஜனநாயக சக்திகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் செயல்படுகிறது. அரசு பணிகளை தடுத்து நிறுத்தியுள்ள நபர்கள் மீது ஊரக வளர்ச்சி அலுவலர் ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை? காவல்துறை ஏன் இன்னும் யாரையும் கைதுசெய்யவில்லை? இதற்கு மாறாக கரூர் மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டிஎஸ்பிகள், 6 காவல் ஆய்வாளர்கள் என 200க்கும் மேற்பட்ட போலீ சாரை பள்ளமருதப்பட்டி கிராமத் திற்கு செல்லும் ஆறு சாலைகளிலும் போராட்டத்தில் ஈடுபடுவோர்களை தடுத்து நிறுத்த தடுப்பு அமைத்து நிறுத்தியுள்ளனர்.
இக்கோரிக்கைகள் மீது 24ம் தேதி காலை இருதரப் பினரையும் அழைத்து சுமூக பேச்சு வார்த்தை நடத்தி கண்டிப்பாக சின்டெக்ஸ் தொட்டி அதே இடத்தில் அமைத்திட நடவடிக்கை எடுக்கப் படும் என கரூர் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மறுக்கும் பட்சத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.
கோரிக்கை ஏற்பு : முன்னதாக கரூர் கோட்டாட் சியர் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தலித்மக்கள் வசிக்கும் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் சிமெண்ட் சாய்வு நாற்காலி போடப்பட்டுள்ளது: சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு இரு தரப்பினரையும் அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் தலித் மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராக முடிவாகுமானால் அதனைத் தடுப்பவர்கள் மீது மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் து.ரா.பெரியதம்பி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் இரா.முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர்கள் கே.கணேஷ், எம்.ஜெயசீலன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஜி.ஜீவானந்தம், விதொச மாவட்ட செயலாளர் பி.இலக்குவன், விச மாவட்ட செயலாளர் எஸ். சண்முகசுந்தரம், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.சரவணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜெ.அன்னகாமாட்சி, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் இரா.முல்லையரசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
வாலிபர் சங்க பள்ளமருதப்பட்டி கிளை தலைவர் எஸ்.சுரேஷ், கிளை செயலாளர் எஸ்.சசிக்குமார், கிளை பொருளாளர் அருள்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (ந.நி.)
நன்றி :: தீக்கதிர்