Friday, January 10, 2014
31-12-2013, காஞ்சிவரம் மாவட்டம், சாலவாக்கம் ஒன்றியம் - பழவேரி கிராமம் புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த சேரிப் பெண் விசாலாட்சி சாதிவெறிப் பிடித்த வன்னிய கும்பலின் கூட்டு சதியால் படுகொலை.
காஞ்சிவரம் மாவட்டம், சாலவாக்கம் ஒன்றியம் - பழவேரி கிராமம் புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த சேரிப் பெண் விசாலாட்சி வயது 17 அரும்புலியூர் கிராமத்தைச் சார்ந்த சாதிவெறிப் பிடித்த வன்னிய கார்த்திக் என்பவன் காதலித்து வயிற்றில் 8 மாத கருவை கொடுத்து ஊர்ப் பஞ்சாயத்தில் போலியாக தாலியைக் கட்டி மனைவியான போதும் அவர் வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தாமல் விசாலாட்சியின் வீட்டிலேயே வைத்து அவரைத் தொடர்ந்து அடித்து கொடுமை செய்துள்ளான். ஊரார் கேட்டதற்கு வரதட்சனைப் பணம் வேண்டும், சாமான்கள் வேண்டும் என்றும் பேசியுள்ளான். ஊராரும் ஒன்றுகூடி நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் தயவு செய்து விசாலாட்சியை அடித்து துன்புறுத்தாதீர்கள் என்று பலமுறை மன்றாடியுள்ளனர்.
தொடர்ச்சியான இந்தக் கொடுமைகளின் உச்சம், வன்னிய சாதிவெறியர்களின் கூட்டு சாதியோடு சேரிப் பெண் விசாலாட்சி வயிற்றில் வன்னிய கரு இருக்கக் கூடாது வண்ணார் சமூகத்துப் பெண் நமது தெருவில் வாழக் கூடாது என்று சாதிவெறியர்கள் ஒன்று கூடி கூட்டு சதி செய்து கடந்த 28-12-2013 நள்ளிரவில் விசாலாட்சியை அடித்து படுகொலை செய்து கிணற்றில் வீசி தற்கொலை நாடகம் ஆடி சாதிவெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
தகவல் அறிந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்களுக்கு தொடர்பு கொண்டு செய்தி சொல்ல,
இன்று 31-12-2013 காலை 9 மணிக்கு மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திரண்டு RDO, DSP ஆகியோரை முற்றுகையிட்டு சாதிவெறியர்கள் மீது கொலைவழக்காக பதிவு செய்ய வேண்டும் - கூட்டு சதியில் ஈடுபட்ட சாதிவெறி கும்பலை கைது செய்ய வேண்டும் - சகோதரியின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் - பிறகே சடலத்தை வாங்குவோம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து
வன்கொடுமைத் தடுப்பு சட்டம் - சிறுபெண் கற்பழிப்பு - பெண்கள் வன்கொடுமை சட்டம் - வரதட்சனை கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என சிறுத்தைகள் கண்டன முழக்கங்களை எழுப்பி சேரிப் பெண் விசாலாட்சி சடலத்தை வாங்க மறுத்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
சிறுத்தைகளின் உறுதியான நிலைப்பாட்டினால் மருத்துவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு சகோதரியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனையில் இது தற்கொலை அல்ல. கொலை என்று உறுதி செய்தனர் மருத்துவர்கள்.
மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் போராட்டத்தை வேகமாக முன்னெடுக்க, அருகில் உள்ள அனைத்து சிறுத்தை தோழர்களும் செங்கை மருத்துவமனையில் கூடினர். போராட்டத்தின் வீரியம் அதிகரித்திருந்தது.
போராட்டக்காரர்களிடம் வந்த காவல்துறையினர் கார்த்தியை கைது செய்து விட்டோம். வழக்கையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்கிறோம் என்று உறுதியளித்தனர்.
அதன் பின்னரே சடலம் வாங்கப்பட்டு விசாலாட்சியின் சொந்த ஊரான பழவேரி கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சிறுத்தைகளின் வீரவணக்க முழக்கங்களுடன் சிறுத்தைகள் படை சூழ விசாலாட்சியின் பிணத்தை சுடுகாடு வரை கொண்டுசென்று இன்று மாலை 6 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
சுடுகாட்டில் சேரி மக்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் போராட்டத்திற்கான அடுத்த வடிவங்கள் குறித்தும் அதற்கான பழவேரி சேரி மக்கள் ஒத்துழைப்பும் வேண்டுமென்று பேசினார்.
வருகின்ற 09-01-2014 அன்று வாலாசாபாத் நகரில் ஒரு மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சுடுகாட்டிலேயே முடிவு எடுக்கப்பட்டது.
உடன் களப்பணியில் வழக்கறிஞர் தேவ அருள்பிரகாசம், பாசறை செல்வராசு, பாக்கம் பேரறிவாளன், மு.ச.ரஞ்சன், தி.வ.எழிலரசு, தென்னவன், செங்கை அன்புச்செல்வன், விச்சுர் செந்தமிழன், ஊடக மையம் ஆதவன், வாலாசபாத் அசோக்குமார் ஆகியோர்.
தலைநிமிரச் சேரி திரளும் - அன்று
தலைகீழாய் நாடு புரளும்!
சேரிபுயல் ஒருநாள் வரம்பு மீறும் - வரலாறு மாறும்!
ஒப்பாரி ஓலங்கள் சேரிக்கும் மட்டும் சொந்தமல்ல.!
- அண்ணன் திருமாவளவன்.
--------------------------
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.