Friday, January 10, 2014
புதுச்சேரி, ஜன.8,2014–
புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:–
கடந்த 2 நாட்கள் இடைவெளியில் கட்சி தலைமையின் அறிவிப்புக்கு பிறகு இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் திரண்டு உள்ளீர்கள். சாதி வெறியர்கள் வாகனங்கள் தர மறுத்தும் சைக்கிள்களிலும், பஸ்களிலும் வந்து இங்கு திரண்டு உள்ளீர்கள். இதன் மூலம் அம்பேத்கார் சிலை அவமதித்ததால் தலித் மக்களிடம் எந்தளவுக்கு மன கொந்தளிப்பு உள்ளது என்பதை புதுவை முதல்– அமைச்சருக்கு உளவுதுறை தெரிவிக்க வேண்டும்.
புதுவை முதல்–அமைச்சர் அம்பேத்கார் சிலை அவமதிப்பை கண்டும் காணாமல் உள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுவையில் 4 இடங்களில் அம்பேத்கார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. ஒரு கும்பல் ஒளிந்து மறைந்து இருட்டில் கல் எறிவதுதான் வழக்கம். இந்தியாவிலேயே சொந்த சாதி மக்களை வன்முறைக்கு தூண்டும் ஒரே ஒரு தலைவர்தான் உள்ளார்.
ராமசாமி படையாச்சியார் சிலையை அவமதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ராமசாமி படையாச்சியார் சிலையை அவமதித்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந்தவர்கள் ஒரு போதும் இதுபோன்ற இழிவு செயல்களில் ஈடுபட மாட்டோம். ராமசாமி படையாச்சியார் சிலையை மீண்டும் அதே பகுதியில் வைக்க வன்னியர் மக்கள் விரும்பினால் எனது சொந்த செலவில் எனது சம்பள பணத்தில் ரூ. 1 லட்சம் நிதி தர தயாராக உள்ளேன்.
ராமசாமி படையாச்சியாரை நீங்கள் வேண்டுமானால் சாதி தலைவராக பார்க்கலாம். ஆனால் நாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு போராடிய தலைவராகத் தான் பார்க்கிறோம்.
ஓட்டு பொறுக்க முதல்– அமைச்சர் ரங்கசாமி நினைக்கிறாரா? அப்படியானால் அம்பேத்கார் சிலையை அவமதித்தவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?
இவ்வாறு அவர் பேசினார்.
செய்தி :: மாலைமலர்