Monday, January 13, 2014

பாதிக்கப்பட்ட தலித் பெண்ணிற்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதித்தது கட்டப்பஞ்சாயத்து

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, திருப்புனவாசல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் பொன்சிறுவரை. இக்கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த திருமிகு.சாந்தி (30) க.பெ.காசிநாதன் என்பவரை கடந்த 28.12.2013 அன்று 3 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் செருப்பாலும், விளக்கமாறாலும் அடித்து அவமானப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கிராம முக்கியஸ்தர்களிடம் பாதிக்கப்பட்ட சாந்தி புகார் கொடுத்துள்ளார். சாந்தி வேலைக்கு சென்ற நேரத்தில் கடந்த 30.12.2013 அன்று சாதி பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட சாந்தி பஞ்சாயத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிற காரணத்தினால் சாதி பஞ்சாயத்து சாந்திக்கு ரூ.25,000 அபராதம் விதித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மறுபடியும் 01.01.2014 அன்று சாதி பஞ்சாயத்தை கூட்டி பஞ்சாயத்தில் விதித்த அபராதத் தொகையை கட்டவில்லை என்று கூறி பஞ்சாயத்து ரூ.1 இலட்சம் அபராதம் விதித்துள்ளது. சாந்தியையும் அவரது வயதான தாயார் உலகம்மாளையும் சாதி பஞ்சாயத்தில் செருப்பாலும் உருட்டுகட்டையாலும் அடித்து அவமானப்படுத்தியும் உள்ளனர்.

இதுகுறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் கடந்த 11.01.2014 அன்று சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்பûயில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த சாந்தி, இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளையாபுரம் அருகில் உள்ள நாவலூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்சிறுவரை கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, பொன்சிறுவரை கிராமத்தில் தன்னுடைய 11 வயது மகன் அருண், 7 வயது மகள் அக்க்ஷயாவுடன் வசித்து வருகிறார். சாந்தியின் கணவர் காசிநாதன் கத்தாரில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு சாந்தி தம்முடைய 30 சென்ட் நிலத்தை விற்பதற்காக முயற்சி செய்திருக்கிறார். இதற்கு சாதி இந்துவான திரு.கணேசன் என்பவர் உதவி செய்கிறேன் என்று கூறி 1 சென்ட் ரூ.800 வீதம் 30 சென்ட் ரூ.24,000த்திற்கு முருகையா என்கிற சாதி இந்துவிடம் விற்றுள்ளார். சில தினங்களில் முருகையா, அதே பகுதியில் உள்ள தம்முடைய நிலத்தை 1 சென்ட் ரூ.1200க்கு விற்றுள்ளார். இதையறிந்த சாந்தி நேரடியாக கணேசனிடம் சென்று இப்படி என் நிலத்தை குறைந்த விலைக்கு விற்றுக் கொடுத்துள்ளீர்களே இது நியாயமா? உங்களுக்கு கமிசன் கேட்டால் நான் கொடுத்திருப்பேனே என்று கூறியுள்ளார். இதற்கு கணேசனும், அவரது மனைவி காளியம்மாளும் சாந்தியை சாதி ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 28.12.2013 அன்று காலை 7.00 மணியளவில் தெருவில் சென்று கொண்டிருந்த சாந்தியை வழிமறித்த கணேசனின் மனைவி காளியம்மாள், சாதி ரீதியாக இழிவாகப்பேசி உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால் எங்களைப் பார்த்து கமிசன் வாங்கியிருக்கிறோம் என்று பேசுவாய், உன் சாதி என்ன, என் சாதி என்ன போயும் போயும் உன் சாதி நாய்களிடமா நாங்கள் கமிசன் வாங்குவோம் என்று இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல் விளக்கமாறால் அடித்துள்ளார். உடனே அங்கிருந்த காளியம்மாளின் மகள்கள் சங்கீதாவும், தேவியும் செருப்பு மற்றும் விறகு கட்டையை எடுத்துக் கொண்டு சாந்தியை கடுமையாக அடித்துள்ளனர். அவரது முடியைப் பிடித்து இழுத்து தெருவில் தள்ளியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சாந்தி, சாதி இந்து பகுதியைச் சேர்ந்த சாதி பஞ்சாயத்து முக்கியஸ்தர்கள் திரு.பஞ்சு, திரு.அப்பாதுரை ஆகியோரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார். இன்றே இதுகுறித்து விசாரணை செய்யுங்கள் என்று சாந்தி கேட்டுள்ளார். இன்று விசாரிக்க முடியாது நாளை 29.12.2013 அன்று விசாரிக்கிறோம் என்று கூறியுள்ளனர். மறுநாள் 29.12.2013 அன்று சாதி பஞ்சாயத்து கூட்டப்படவில்லை. இந்நிலையில் 30.12.2013 அன்று பாதிக்கப்பட்ட சாந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் அடிப்படையில் வேலைக்கு சென்றுள்ளார்.

அன்றைய தினம் 30.12.2013 அன்று மாலை 4.00 மணியளவில் சாதி பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். சாந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சாந்தி வேலை முடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். சாந்தி வராததால் ஆத்திரமடைந்த சாதி பஞ்சாயத்து, நம்மை மதிக்காத சாந்திக்கு அபராதம் ரூ.25,000 போடுகிறோம் என்று கூறியுள்ளனர். அவரிடம் யாரும் பேசக்கூடாது, உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி மீறி யாராவது பேசினால் அவர்களுக்கும் அபராதம் போடப்படும், ஊரை விட்டு தள்ளிவைப்பார்கள் என்று பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.

பயந்துபோன சாந்தி தம்முடைய சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம், நாவலூர் பகுதிக்கு வந்து தம்முடைய தாயார் உலகம்மாள், கொழுந்தனார் காசிலிங்கம் ஆகியோரை அழைத்துக் கொண்டு பொன்சிறுவரை கிராமத்திற்கு 03.01.2014 அன்று வந்துள்ளார். அன்று சாதி பஞ்சாயத்தில் சாந்தியும் அவரது தாயார் உலகம்மாளையும் திரு.கணேசன் குடும்பத்தினர் எல்லோர் முன்னிலையிலும் செருப்பாலும் விறகு கட்டையாலும் அடித்து அவமானப்படுத்தியுள்ளனர். இந்த கிராமத்தில் நாங்கள் பெரும்பான்மையினர், உங்கள் சாதி என்ன எங்கள் சாதி என்ன, எவ்வளவு திமிரு இருந்தால் எங்களை மதிக்காமல் நடந்து கொள்ளலாம். உங்களுக்கு 1 இலட்சம் அபராதம் போடுகிறோம் என்று கூறியுள்ளனர். சாந்தியிடம் பேசிய முத்துலெட்சுமி, மாரிமுத்து ஆகியோருக்கு ரூ.5000 அபராதம் போட்டுள்ளது பஞ்சாயத்து.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாந்தி, திருப்புனவாசல் காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளார். காவல்நிலையத்தில் புகார் பெற்றுக் கொண்டதற்கான ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து திருப்புனவாசல் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அந்தோணி குருஸ் அவர்களை எமது குழுவினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வருவதனால் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. அதனால் டி.எஸ்.பி. கவனத்திற்கு இதை கொண்டு சென்றிருக்கிறோம்” என்று கூறினார்.

கோட்டைபட்டிணம் டி.எஸ்.பி. திரு.மகாதேவனிடம் எமது குழுவினர் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து கேட்டனர். “இரண்டு சாட்சிகள் இருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண் சாந்தி கூறினார். ஆனால் அந்த இரண்டு சாட்சிகளையும் சாந்தி அழைத்து வரவில்லை. விசாரணை செய்து வருகிறோம். விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வோம். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தைரியமாக கிராமத்தில் இருங்கள். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறேன் என்று கூறினேன். ஆயினும் சாந்தி பயந்து கொண்டு கிராமத்தைவிட்டு வெளியேறியுள்ளார்” என்று கூறினார்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட யார் புகார் கொடுத்தாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு டி.எஸ்.பி.தான் பதிவு செய்ய வேண்டுமென்று அவசியம் இல்லை. அதுமட்டுமல்ல டி.எஸ்.பி. தானாகச் சென்று நேரடியாக விசாரணை செய்ய வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட பெண்ணிடமே சாட்சிகளை அழைத்து வாருங்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. பொன்சிறுவரை கிராமத்தில் தலித்துகள் வெறும் 5 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல்வேறு சாதிய அடக்குமுறைகள் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த தலித்துகள் எமது குழுவினரிடம் கூறியிருக்கின்றனர். ஆகவே அப்பகுதியில் தலித்துகள் உயிருக்கு அச்சத்தோடு வாழ்ந்து வருவது தெரிய வருகிறது.

பரிந்துரைகள்

§ சாந்தியை கடுமையாக அடித்து சித்திரவதை செய்த சம்பந்தப்பட்ட வன்கொடுமை கும்பல் மீது தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(1)(11) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

§ சாந்திக்கு அபராதம் விதித்து சாதி பஞ்சாயத்து நடத்தி அந்த பஞ்சாயத்தில் சாந்தி மீது தாக்குதக்கு காரணமாக இருந்த சாதி பஞ்சாயத்து கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

§ பாதிக்கப்பட்ட சாந்திக்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

§ சாந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அங்குள்ள தலித்துகளுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும்.

§ மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் அக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று உண்மைகளை கண்டறிந்து அப்பகுதியில் நடக்கக்கூடிய தீண்டாமை பாகுபாடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


(A.கதிர்)
செயல் இயக்குனர்
எவிடன்ஸ்

இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -