Monday, January 13, 2014
கௌரவ கொலைகளில் பலியாகக் கூடிய பெண்கள் அனைவரும் சாதி இந்து பெண்கள் தான். தலித் இளைஞர்களை காதலித்ததற்காகவும் திருமணம் செய்து கொண்டதற்காகவும் இப்பெண்கள் குடும்ப உறுப்பினர்களாலும் உறவினர்களாலும் சாதி குழுக்களாலும் கொலை செய்யப்படுகின்றனர். இது சாதிய ரீதியான படுகொலையாக இருந்தாலும் சட்ட ரீதியாக சாதிப் பாகுபாட்டால் நடத்தப்பட்ட படுகொலை என்று பதிவு செய்வதற்கு சட்ட வரைமுறையில் இடமில்லை. கொலை செய்யப்பட்டது தலித் அல்லாத பெண், கொலை செய்ததும் அல்லாதோர்கள் என்று எளிதாக அரசு விளக்கம் கொடுத்துவிடும். தன்னுடைய மகளை விரும்புகிற அல்லது திருமணம் செய்து கொள்கிற தலித் ஆணை சாதி இந்துக்கள் கொலை செய்தால் அவற்றை சாதி ரீதியான படுகொலையாக வழக்கினை பதிவு செய்ய முடியும். ஆகவே சட்ட ரீதியாக, கௌரவ கொலை செய்யப்படுகிற பெண்களின் வழக்கினை சாதிய படுகொலையாக பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் சர்வதேசிய அளவில் கௌரவ கொலைகள் என்கிற வன்முறை பெரிய அளவில் விவாத களமாக மாறியிருக்கிறது. கௌவர கொலைகளுக்கு எதிராக சர்வதேசிய சட்ட தலையீடுகள் மேற்கொலள்ள உலக அளவில் முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன. ஆகவே சர்வதேசிய சமூகத்திற்கு தமிழக சூழலிலிருந்து அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றால் இவற்றை கௌரவ கொலைகளாகவே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஆகவே இவற்றை சாதிய ரீதியான கௌரவ கொலைகள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் தற்போது கௌரவ கொலைகள் என்பதை விட போலி கௌரவ கொலைகள் என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று உலக அளவில் உள்ள சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனடிப்படையில் சாதிய ரீதியான போலி கௌரவ கொலைகள் என்றும் அழைக்கலாம். தற்போது கௌரவ கொலைகள் என்கிற வார்த்தையை சர்வதேசிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதனால் சர்வதேசிய நீதி விசாரணைக்கு இவ்வார்த்தையை பயன்படுத்துகிற சூழல் ஏற்பட்டு விடுகிறது. மற்றபடி இந்த வார்த்தையின் மீது யாருக்கும் உடன்பாடு அல்ல என்பதுதான் உண்மை.
- எவிடன்ஸ் கதிர்