Sunday, December 8, 2013


தருமபுரி, இளவரசன் – திவ்யாவின் காதல் திருமணத்தையொட்டி திவ்யாவின் தந்தையுடைய மரணமும், அதைச் சாக்காக வைத்து நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று ஊர்களில் நடந்தப்பட்ட  சாதிக் கலவரமும்  நிகழ்ந்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதியோடு ஒரு வருடம் ஆகிறது. ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராக இப்படிக் களமிறங்குவது புதிதில்லை என்றாலும் வேறெந்த கலவரத்திற்கும் இதற்கும் உள்ள பாரிய வேறுபாடு, சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் “தமிழகத்தின் நக்சல்பாரி” என அழைக்கப்பட்ட மாவோயிஸ்ட் கோட்டையில் இது நிகழ்ந்திருக்கிறது என்பதுதான். கந்துவட்டிக் கொடுமை, இரட்டைக்குவளை முறை போன்ற ஒடுக்குமுறைகளை அன்றைய சூழலில் பெருமளவு ஒழித்துக்கட்டியதோடு பல சாதி மறுப்புத் (வன்னிய – தலித்) திருமணங்களையும் நடத்திக்காட்டித் தமிழகத்தின் முன்னோடிப் புரட்சிகர மாவட்டமாகத் திகழ்ந்த தருமபுரி, இப்படி ஒரு கலவரத்தைச் சந்தித்திருப்பது வேதனைக்குரியது. இந்த மாற்றத்தையும் அதன் காரணிகளையும் இளவரசனின் மரணம் ஏற்படுத்திய அதிர்வுகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று தோன்றியபோது,   இரண்டு மாதங்களுக்கு முன்பு தருமபுரியை நோக்கிப் பயணமானேன்.

முதற்பயணம் என்பதால் அறிமுகத் தேவைக்காக அ.மார்க்ஸ் மற்றும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட  தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேடியப்பன் ஆகியோருடன் சென்றேன். தருமபுரியில் இருந்து ஒரு 15 நிமிடப்பயணம். மதியம் 2 மணியளவில் நத்தத்தை அடைந்தோம். வழக்கமான பாதை காவல்துறையின் கண்காணிப்பில் இருந்ததால் பிறிதொரு வழியில் சென்றோம். கலவரம் முடிந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் உருண்டோடி இருந்தாலும் நத்தம் இன்னமும் பழைய நிலைக்குத் திரும்பாமல் இருந்தது. மூத்த வழக்குரைஞர் இரத்தினம் மற்றும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், செங்கொடி முதலானோர் தொடர்ந்த வழக்கில்,  சாதி வன்முறையின்போது  அழிக்கப்பட்ட தலித் மக்களின் வீடுகளைத் திருப்பிக் கட்டித் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்ததைப் பத்திரிக்கைகளில் படித்திருந்ததால் அவ்வீடுகளை ஆவலுடன் தேடினேன்.

சென்றுபார்த்தபோது, ஒன்றிரண்டு வீடுகள் தான் கட்டிமுடிக்கப்படும் நிலையில் இருந்தன. பல இடங்களில் அப்போது தான் கடைக்காலே போட்டிருந்தார்கள். ஆனால், மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தார்கள். எரிக்கப்பட்ட வீட்டின் சுவர்களில் படிந்திருந்த கரும்புகையில் குழந்தைகள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்திருந்தார்கள். இளவரசனின் மரணத்தை ஒட்டி வைக்கப்பட்டிருந்த, இளவரசன் – திவ்யாவின் புகைப்பட பேனர் ஒரு மளிகைக் கடையின் கூரையாகத் தொங்கவிடப்பட்டிருந்தது. வழக்குரைஞர்கள் செங்கொடியும் தமயந்தியும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்காக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட வந்திருந்தனர்.

மக்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, இன்னமும் நிவாரணத்தொகை முழுமையாக வரவில்லை என்றும் எந்தப் பாதிப்பும் இல்லாத சிலருக்கு அதிகப் பணம் சென்றிருக்கிறது என்றும் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணம் வரவில்லை என்றும் சொன்னார்கள். அரசு கொடுக்கும் மணல் மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகவும் சொன்னார்கள். பெண் ஒருவர் சொன்னார், “என்னத்த சாதி சாதி –ன்னு சொல்றாங்க. வீடு கட்ற கான்ட்ராக்டரே நம்மாளு தான். ஆனா, ஒழுங்காவே கட்டி தரதில்ல. ஒயரிங் கூட பண்ணமாட்டேன்னு சொல்றாங்க” என்றார்.

பேசிக் கொண்டே இளவரசன் வீட்டை வந்தடைந்தோம். இளவரசன் உடல் புதைக்கப்பட்டு அன்றோடு சரியாக ஒருமாதம் ஆகியிருந்தது. வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய ‘டென்ட்’ அடித்து ஆண்களும் பெண்களுமாய் நான்கைந்து போலிஸ்காரர்கள் காவலுக்கு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் கடந்து சென்றபோது அவர்கள் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. அரசு கட்டிக்கொடுத்திருந்த இரண்டு சிறிய அறை கொண்ட வீட்டின் – அனேகமாக இது மட்டும் தான் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட வீடாக இருந்தது -  முதல் அறையில் ஒரு வயதான பாட்டி படுத்துக் கொண்டிருந்தார். அருகில் இளவரசனின் புகைப்படம் சந்தனமாலை போடப்பட்டு இரண்டு காமாட்சி அம்மன் விளக்குகளுடன் வைக்கப்பட்டிருந்தது. இளவரசனின் அண்ணன் உள்ளே சென்று அம்மாவிற்கு தகவல் கொடுத்தார். ஓரிரு நிமிட காத்திருப்புக்குப் பின் அப்போதுதான் குளித்து முடித்திருந்த ஈரத்தலையைக் கட்டியபடி அவர் வெளியே வந்தார். வரவேற்க வேண்டி ஒரு சிறிய புன்னகையோடு அழைத்து பாய் எடுத்துப் போட்டார். சிறிது மவுனத்திற்குப் பின் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தோம்.

சொல்வதற்கு அவரிடம் நிறைய துயரங்கள் இருந்தன. தன் பிள்ளை இரண்டு வருடமாய் காதல் வயப்பட்டிருந்தது, தங்களிடம் கூடச் சொல்லாமல் ஓடிப்போனது, கலவரத்திற்குப் பின் அவர்களைக் காப்பாற்றி வைத்திருந்தது, கோர்ட், கேசுகளுக்காய் அலைக்கழிந்தது, இறுதியில் தன் பிள்ளையை வாரிக்கொடுத்தது என பல்வேறு செய்திகளையும் கொட்டினார்.
திவ்யா இவர்களை விட்டுப் பிரிய நேர்ந்த சூழல் குறித்துப் பேச்சு திரும்பியது. இளவரசனை விட்டுக் கடந்த ஜூன் (2013) முதல்வாரத்தில் திவ்யா பிரிந்து சென்றார். தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பார்க்கச் சென்ற திவ்யா மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயைப் பார்க்கச் சென்ற திவ்யா திரும்பிவரவில்லை என்றும் நாளிதழ்களில் வெவ்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன. ஆக, உடல் நலமில்லை என்று சொல்லித் திவ்யாவைத் தன் பக்கம் வரவழைத்து, இளவரசனிடமிருந்து திட்டமிட்டுப் பிரித்துவிட்டனர் என்பது தான் செய்தியின் சாரம். ஆனால், இப்படியாக நாம் அறிந்திருந்த அந்தச் செய்தி உண்மையில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இளவரசனின் அம்மா விளக்கிய போது, அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அவர் சொன்னார் :

“அன்னிக்கு எப்பயும் போல (திவ்யா) நல்லா தான் இருந்தா. எந்த ஒரு மாற்றமும் இல்ல. ரெண்டு வாட்டி ஃபோன் வந்திச்சி பேசிக்கினு இருந்தா. அப்புறம்  எங்க கூட கொஞ்ச நேரம் ஒக்காந்து டி.வி. பாக்கறா. அப்புறம் ஒரு ரூம்ல ஒக்காந்துனு தலகாணி போட்டுகினு டைரி எழுதறா. அப்புறம் படிக்கட்டுக்கா ஒக்காந்துகினு காதுல சொருவிக்கினு பாட்டு கேக்கறா. கட்டில்மேல ஒக்காந்து லேப்டாப் விளையாடறா. அப்புறம் மணி ஒரு மணி ஆயிடுச்சி வந்து சாப்பிடுமான்றேன். இல்லமா, எனக்கு பசிக்கல அப்புறமா வந்து சாப்படறேன்னு சொல்றா. இப்டியே தாம்மா ஒக்காந்துனு இருந்தோம். அந்த வீட்ல ரெண்டு பக்கம் வாசல் இருந்துச்சு. ஆனா நாங்க ஒருபக்கமாத்தான் போய் வருவோம். இன்னொருபக்கம் கரண்ட் ஆஃப் ஆச்சின்னா திறந்து வச்சிட்டு நிப்போம். அன்னிக்கு மதியம் 1.30 மணிக்கு கரண்ட் ஆஃப் ஆச்சு. இவளும் அந்தப்பக்கம் கதவை திறந்தா. சரி எப்பயும் போலத்தான் காத்து வாங்க நிக்கறான்னு நெனச்சி ஏமாந்துட்டேன். இவ கதவை தெறந்துவிட்டுட்டு அப்டியே கெளம்பிட்டு இருக்கிறா...”

அருகில் இருந்த வேடியப்பன் தோழர் அதிர்ந்துபோய் கேட்டார் “என்ன! சொல்லாமலே போய்ட்டாங்களா?!” “ம்ம்.. சொல்லாமலே தான் போய்ட்டா. படிக்கட்ல இருந்து அப்டியே கீழ எறங்கி போய்ட்டுகிறா. அப்பவே இளவரசனுக்கு ஃபோன் பண்ணி, ‘எங்க அம்மாவுக்கு சீரியஸாண்டா.. கவிதா ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம். எங்க அம்மா செத்துட்டா பாடிகிட்ட என்ன யாரும் சேத்தமாட்டாங்கடா.. நான் போய் பாத்துட்டு மட்டும் வந்துடறேன்டா இளா’ ன்னு சொல்லிகிறா.. அதுக்கு அவன், ‘இல்லமா! நீ மட்டும் போனா பிரச்சினை ஆயிடும். ஒரு பத்து நிமிஷம் இரு. நானும் வந்துடறேன். ரெண்டு பேரும் போய் ஹாஸ்பிடல்ல பாக்கலாம்’னு  சொல்றதுக்குள்ள, இவ கீழ போய்ட்டுகிறா. கீழ வண்டிய வச்சிக்கினு ஏறு! ஏறு! சீக்கிரம் ஏறுன்றாங்களாம்”

கீழே யார் வந்திருந்தது? என்று கேட்டேன். “யாரு, எல்லாம் அவங்க அம்மா அவங்க ஆளுங்கதான். இவளை கீழ வரசொல்லிட்டு ரெடியா ஆட்டோ வச்சிக்கினு நின்னுருந்திருக்காங்க. எங்க அம்மாகிட்ட வந்துட்டேன்டான்னு திவ்யா சொன்னதும் அவ அம்மா ஃபோனை வாங்கி என் புள்ள என்கிட்ட வந்துடுச்சி நீ தேடாதன்னு சொல்லியிருக்கா.. இதுக்கப்புறம் இளவரசனும் அவன் அண்ணனும் (பாலாஜி) ஒடனே வீட்டுக்கு வந்தாங்க. வந்ததும் ‘என்னமா வீட்ல இருந்துகினே விட்டுட்டயேமான்னு’ கேக்கறான். நான் என்னடா பண்ணுவேன்.. நாங்க நாலு பேரும் (மாமியார், அக்கா, அக்காவின் கணவர்) இப்பிடிதான் ஒக்காந்துனுகிறோம். கரண்ட் இல்லயே காத்தோட்டமா நிக்கறான்னு தான் நெனச்சேன். இப்டி போவான்னு தெரியாதேப்பான்னு சொல்றேன். அப்புறம், நானும் அண்ணனும் கவிதா ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு வரோம்மான்னு சொல்றான். இல்லப்பா, நீ போனா எதாவது பிரச்சினை ஆவும். நீ இரு, நான் போய் பாத்துட்டு வரேன்னு சொல்லி, கவிதா ஹாஸ்பிடலுக்கு ஓடிப்போய் கீழ, மேல, மூணாவது மாடில எல்லாம் தேடறேன். அப்புறம் அட்மிஷன் போட்றவங்ககிட்ட போய், தேன்மொழின்ற பொம்பளை வவுத்துவலி கேஸ்ங்க.. எந்த ரூம்ல சேர்த்திருக்காங்கன்னு கேட்டதுக்கு இன்னிக்கு அப்டி ஒரு கேஸே வரலமான்னு சொல்லிட்டாங்க. அவ்ளோதான் நடந்ததே. ஒரு சண்டை இல்ல, சாரி இல்ல, நல்லா இருக்கறா, விளையாடறா, பேசறா, அவனை அனுப்பி வக்கறா, அனுப்பி வச்சிட்டு அதுக்குள்ள இவ்ளோ நடந்துபோச்சி. அவ போனதும் நாலாம் தேதி. இவன் செத்ததும் நாலாம் தேதி. பிளான் பண்ணி தூக்கிட்டாங்க” என்று முடித்தார்.

மீண்டும் அடுத்தநாள் நத்தம் காலனி சென்ற போது இளவரசனின் அப்பாவையும் சந்திக்க முடிந்தது. “இளவரசனுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் ஏற்படும்” என்பதாக ஒரு மொட்டை கடிதம் அவரது முகவரிக்கு வந்திருந்தது. அதை உடனடியாகச் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் காட்டிப் புகார் கொடுத்துவிட்டு அப்போதுதான் திரும்பி இருந்தார். இரண்டு இரவுகள் தொடர்ச்சியாய்ப் பயணம் செய்திருந்த களைப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவர் பேசத் தொடங்கினார். அவர் சொல்லிய இன்னொரு செய்தி மேலும் அதிர்ச்சியளித்தது. திவ்யாவின் தந்தை இறந்த செய்தி திவ்யாவிற்கு எப்போது தெரியும் என்று நான் கேட்டபோது, “நாகராஜ் பொணத்தை வச்சி ஊர் எல்லாம் எரிக்கறாங்கன்னு சொன்னப்ப, உடனே,  பாட்டி வீட்டில் தங்கவச்சிருந்த இளவரசன், திவ்யாவை கூட்டிக்கினு தருமபுரி போயிட்டோம். அங்க போய் விஷயத்தை சொன்னப்ப, நம்மளால தான இவ்ளோ பிரச்சினை நாமளும் செத்துடலாம்னு இளவரசன் சொல்றான்.. நாங்களும் ரொம்ப டென்ஷன்ல இருந்தோம்.. அப்புறம் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகினு, இல்லடா சாவறதுலாம் வேணாம்டா, இருடான்னு நான் அவனை சமாதானப்படுத்திக்கினு இருக்கேன், அப்புறம் நான் வெளிய போய்ட்டு வர்றதுக்குள்ள பொண்ணு எஸ்கேப் ஆயிட்டா.  இவங்க மூணு பேர் தான் வீட்ல இருந்தாங்க. இவ என்ன பண்ணிட்டா நேரா B1 ஸ்டேஷன்ல போய் சரண்டர் ஆயிட்டா”
ஸ்டேஷன் வீட்டுக்குப் பக்கத்துலயே இருக்கா என்று கேட்டேன். அது 2,3 கிலோமீட்டர் இருக்கும். ஆட்டோவில போகனும் என்று இளவரசனின் அம்மா சொன்னார். பிறகு திவ்யாவே இளவரசனுக்கு ஃபோன் பண்ணி தான் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஸ்டேஷனில் இருந்து எஸ்.பி.அஸ்ரா கார்க்கிற்கு ஃபோன் பண்ணி இருக்கிறார்கள். அவர் வந்து இருவரையும் தனியாகப் பேசவிட்டிருக்கிறார். பிறகு, இப்ப எங்க போறீங்க என்று இளவரசனிடம் எஸ்.பி கேட்டதற்கு, “எங்க அக்கா வீடு மெட்ராஸ்ல இருக்கு. நாங்க மெட்ராஸ்க்கு போறோம்னு”  சொல்லி இருக்கிறார். உடனே, எஸ்.பி இரண்டு Gun men, ஓரு லேடி போலிசை அழைத்து, காவல்துறை வாகனத்திலேயே போலீஸ் பாதுகாப்பில் சென்னை அனுப்பி வைத்திருக்கிறார்.

இப்போது என்னால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. செய்திகள் கசிந்திருந்தபடி,  தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் கூறி, திவ்யாவை ஏமாற்றி யாரும் அழைத்துச்செல்லவில்லை. உண்மையில், அவரும் சேர்ந்தே இந்தத் திட்டத்தைத் வகுத்திருக்கிறார். இப்படிச் சொல்வதன் பொருள், இது திவ்யாவின் தனிப்பட்ட சுய முடிவு என்பதோ, ஆரம்பம் முதலே திவ்யாவை விரட்டிக்கொண்டு வந்த வன்னிய சாதியினருக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதோ அல்ல.   திவ்யாவின் காதலையும் மனஉறுதியையும் அவரது தந்தையின் மரணம் தான் முதலில் அசைத்துப் போட்டிருக்கிறது. ஆனால், அதையும் மீறி அவர் தனது காதலிலும் உறுதியாகத் தான் இருந்திருக்கிறார். “நீ என்ன ரத்தம் ரத்தம்ன்றயே.. உன் உடம்புலயும் அதே ரத்தம் தான் ஓடுது, அவன் (இளவரசன்) உடம்புலயும் அதே ரத்தம் தான் ஓடுது. உங்க கட்சியை வளக்க எங்க ரெண்டு பேர் வாழ்க்கை தான் கெடைச்சதா?” என்று பா.ம.க.வக்கில் பாலுவிடம் நீதிபதிகள் முன்பாகவே துணிந்து கேள்வி கேட்டிருக்கிறார். ஆனால், திவ்யாவின் இந்த நெஞ்சுரத்தைப் பின்தொடர்ந்து கொண்டே வந்த சாதிய அதிகாரம் தான் குலைத்துப்போட்டிருக்கிறது. வெளிப்படையாகச் சொல்வதானால் பா.ம.க.வும் வன்னிய ஆதிக்க சக்திகளும் சாதியின் பெயரால் ஒரு இளம் காதலை மட்டுமல்ல, தனிநபர்களின் அடிப்படை வாழ்வுரிமையையே அழித்தொழித்திருக்கின்றன.

இதனை, அவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்த வரலாறு சட்டவிரோதமானது மட்டுமல்ல, இங்கு பலராலும் கண்டுகொள்ளப்படாமல் மழுங்கடிக்கப்பட்டதும் கூட. இளவரசன் – திவ்யாவின் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு இத்தனை பெரிய கலவரம் வரை கொண்டு செல்லப்பட்டதற்குக் காரணம் நாயக்கன்கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பா.ம.க பிரமுகர்கள் மற்றும் வன்னிய சாதியவாதிகள் தான்.
இளவரனும் திவ்யாவும் அக்டோபர் 8 (2012) அன்று வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள். அக்டோபர் 15 இல், சேலம் சரக டி.ஐ.ஜி.யிடம் இருவரும் சரணடைகிறார்கள். தருமபுரி B1 ஸ்டேஷனில் அவர்கள் ஒப்படைக்கப்பட்ட பின், இருவரது பெற்றோரையும் காவல்துறையின் அழைத்திருக்கின்றனர். திவ்யாவின் அப்பா, “என் பொண்ணு செத்துப்போச்சுன்னு நெனச்சிக்கறேன்” என்று சொல்லிவிட இளவரசனின் பெற்றோர் மட்டும் காவல்நிலையத்திற்குச் சென்றிருக்கிறார்கள். காவல்துறையினர் இளவரசன் பெற்றோரை சமாதானப்படுத்திப், புதுமணத் தம்பதிகளை அவர்களோடு அனுப்பி வைத்துள்ளனர். இருவீட்டாரைப் பொருத்தவரையில் பிரச்சினை இதோடு முடிகிறது.
இதற்குப்பிறகு தான் பா.ம.க.வும் வன்னிய சாதியவாதிகளும் இப்பிரச்சினையைக் கையிலெடுக்கிறார்கள். பக்கத்து ஊரான வெள்ளாளப்பட்டியின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வி.பி.மதியழகன் பா.ம.க.வைச் சேர்ந்தவர். இவர் தான் முதன்முதலாக, அக்டோபர் 17 (2012) அன்று நத்தத்தின் ஊர் கவுண்டரான சக்திக்கு ஃபோன் செய்து இளவரசன் – திவ்யா பிரச்சினை குறித்துப் பஞ்சாயத்து பேசவேண்டும் என்று அழைக்கிறார்.

சக்தி அங்கே சென்ற போது, பா.ம.க மட்டுமின்றி அ.தி.மு.க, தி.மு.க என பிற கட்சிகளைச் சேர்ந்த சுற்றுவட்டார கிராமத்தின் வன்னியர்கள் கிட்டத்தட்ட 200 பேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள், சக்தியிடம் பெண்ணை எப்படியாவது கண்டுபிடித்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்று சொல்லியதோடு, மீண்டும் மறுநாள் பஞ்சாயத்தில் வந்து பதில் கூறவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்தநாள் (18.10.12) வி.பி.மதியழகனின் வீட்டிலேயே பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கிறது. சக்தி தனது ஊர்க்காரர் 10 பேரை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். இளவரசனும் அந்தப் பெண்ணும் எங்கே இருக்கிறார்கள் என தங்களுக்குத் தெரியாது என்று சக்தி சொல்ல, அதற்கு மதியழகன், “அந்தத் தேவடியாளுக்கு தான் அறிவில்ல, உங்க பையனுக்கு எங்க போச்சு அறிவு. எனக்கு ஒருநாளைக்கு 10, 20 ஃபோன் வருது. பிரச்சினை என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு கேட்கறாங்க. அந்த பொண்ணை கூட்டினு வந்து விடலன்னா பிரச்சினை பெரிசாவும்” என்று மிரட்டியிருக்கிறார்.

பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின், நவம்பர் நான்காம் தேதி மதியழகன் தரப்பில் மீண்டும் நியாயம் பேச சக்தியை அழைத்திருக்கிறார்கள்.  அப்போது சுற்றிலும் உள்ள 25 கிராமத்திலிருந்து சுமார் 400 பேர் வன்னியர் தரப்பில் வந்திருக்கிறார்கள். நத்தத்தில் இருந்து சக்தி தனி ஒருவராகச் சென்று, தனக்கு எதுவும் தெரியாது என மீண்டும் சொல்லி இருக்கிறார். அவர்கள் விடாமல் அடுத்தநாளும் (5.11.12) அழைத்திருக்கிறார்கள். சக்தி தன் ஊரில் இருந்து 20 பேரை அழைத்துக்கொண்டு சென்றபோது, அவர்கள் 500, 600 பேர் கூடியிருக்கிறார்கள். அதில், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த முருகன்,"பாத்தையா நாம வேலையெல்லாம் 
வுட்டுட்டு சுத்தி 25 ஊர்க்காரங்க வந்திருக்கோம். இவனுங்க எவ்ளோ திமிரா 5 பேர், 10 பேர்னு வர்றானுங்க” என்று சொல்லியிருக்கிறார். சக்தி மற்றும் உடன்சென்றவர்களை நோக்கிச் சாதிப் பெயரை எல்லாம் சொல்லி  திட்டி இருக்கிறார்கள்.  இவர்களின் தொல்லைகளும் மிரட்டல்களும் தாங்கமுடியாமல், இறுதியாக வரும் 7 ஆம் தேதி பெண்ணை அழைத்து வருவதாகவும், பெண் உங்களோடு வரவிரும்பினால் நீங்கள் அழைத்துச் செல்லலாம் என்றும் சொல்லிவிட்டு சக்தியும் மற்றவர்களும் புறப்பட்டிருக்கிறார்கள்.

\நிற்க. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், இந்தப் பஞ்சாயத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு வீட்டாரும் எந்த வகையிலும் பங்கெடுக்கவில்லை என்பது தான். திவ்யாவின் தந்தை நாகராஜ், இந்தப் பஞ்சாயத்துகளில் 4 மற்றும் 5 ஆம் தேதி  மட்டுமே வந்திருக்கிறார். அப்போதும் கூட, தன் மகளை அழைத்து வந்து விடும்படி ஒரு வார்த்தை கூட அவர் பேசியிருக்கவில்லை. நவம்பர் 7, அன்று தன் மகளை பஞ்சாயத்தில் சந்திப்பதற்குக் கூட அவர் செல்லவில்லை. திவ்யாவின் அப்பாவைப் பற்றி நத்தம்காலனியில், அத்தனை பேரும் ரொம்பவும் நல்லவிதமாகத் தான் சொன்னார்கள். முன்னாள் மாவோயிஸ்டான அவர், இறுதியாகத் தே.மு.தி.க.வில் இருந்திருக்கிறார். அவர் பணிபுரியும் வங்கிக்குச் சென்றால் கூட தங்களை அவர் நல்ல மரியாதையுடன் நடத்துவார் என்றும் இந்தப் பிரச்சினைக்குப் பிறகும் கூட  தங்களை அவர் எப்போதும் போல்தான் பாவித்தார் என்றும் சொன்னார்கள்.
பஞ்சாயத்திற்கு இளவரசனின் பெற்றோரையும் ஒருமுறை கூட அழைக்கச்சொல்லவில்லை. ஆக, பிரச்சினையை எதிர்கொண்டிருக்கும் இரு குடும்பத்தினரைத் தவிர்த்து மற்றவர்கள் தான் இதில் பங்கெடுக்கிறார்கள். 
 நவம்பர் 7 ஆம் தேதி, சக்தி மற்றும் நத்தத்தைச் சேர்ந்த ஏழெட்டு பேர் இளவரசன் அப்பாவிடம் பேசி, இளவரசன் திவ்யாவை பொது இடமான தொப்பூருக்கு வரவழைத்திருக்கிறார்கள். வன்னியர் தரப்பில் பஞ்சாயத்து பேசியவர்கள்  எல்லாம் வராமல் திவ்யாவின்  அம்மா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி ஆகிய 11 பேரை  மட்டும் அனுப்பியிருக்கிறார்கள். பெண்வீட்டார் திவ்யாவைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார்கள். “உன் கால்ல கூட விழறேன்.. வந்துடும்மா.. இந்த வாழ்க்கைலாம் உனக்கு தேவையா.. அங்க வந்து உனக்கு சீர்வரிசை  செய்ய முடியுமா.. வந்துடும்மான்னு”

திவ்யாவின் அம்மா எவ்வளவு கெஞ்சிக் கூப்பிட்டபோதும் திவ்யா வரமறுத்திருக்கிறார். திவ்யா குடும்பத்தினருடன் வந்திருந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த தலித் பிரமுகர் ஒருவர்,
திவ்யாவை அழைத்து ‘ஏம்மா! நீ விருப்பப்பட்டு தான் வந்தையா?’ என்று கேட்டதற்கு , “அண்ணா! நாங்க ரெண்டு வருஷமா லவ் பண்றது எங்க அம்மாவுக்கும் தெரியும், எங்க அப்பாவுக்கும் தெரியும். நான் விருப்பப்பட்டு தான் வந்தேன்” என்று திவ்யா சொல்லி இருக்கிறார். உடன் வந்த திவ்யாவின் உறவினர்கள் இதைப் பெரிய அவமானமாகக் கருதி இருக்கிறார்கள். அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு வண்டியில் ஏறிய உடனேயே ஒருவர், திவ்யாவின் அப்பாவிற்கு ஃபோன் பண்ணி  “ஏன்டா! அவ வரமுடியாது, அவன் கூடதான் வாழுவேன்னு சொல்றா, ரெண்டு பேரும் லவ் பண்றது உங்களுக்கு எல்லாம் தெரியுமாம், மூடிவச்சி கழுத்தை அறுத்தீட்டீங்களே...” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார். அடுத்த அரைமணிநேரத்திற்குள் திவ்யாவின் அப்பா தூக்கில் தொங்கிய செய்தி கிடைத்திருக்கிறது.
இதற்குப் பிறகு, திவ்யாவின் அம்மாவை ஆட்கொணர்வு மனு போடவைத்தது, திவ்யா அப்போதும் வரமறுத்தது, பிறகு திவ்யாவின் அம்மா நேரே இளவரசன் வீட்டிற்கே சென்று ‘மாமியார்’ போல் பழகி மகளைப் பிரித்தது, அவர்களின் கைப்பாவையாக திவ்யா மாறியது எல்லாம் நாம் அறிந்தவைதான். ஒரு கட்டப்பஞ்சாயத்தில் ஆரம்பித்து, இரு மரணங்களில் முடிந்த இந்தப் பிரச்சினையில் கவனிக்க வேண்டியவை என்பதாக மனதில்பட்ட சில அம்சங்கள் :

1.இளவரசன், திவ்யா திருமணம் என்பது இரு தனிநபரின் தேர்வு உரிமை. இதில் தலையிட அவர்களது குடும்பத்தினருக்குக் கூட அதிகாரம் இல்லை. ஆனால், இது இரு குடும்பத்தினரையும் தாண்டி இரு சாதியச் சமூகத்தின் பிரச்சினையாக மாற்றப்படும் அவலம், இந்திய – தமிழ்ச் சமூகத்தில் திருமணம் என்பது இன்றளவும் தனிநபர்களுக்கிடையேயான ஒப்பந்தமாக இல்லாமல், இரு குடும்பங்கள், இரு சாதிகளுக்கு இடையிலான ‘கவுரவ’ ஒப்பந்தமாக இருப்பதையே காட்டுகிறது. தமிழ்மொழி, தமிழர் என்னும் பேரடையாளங்களை முன்னிறுத்தி அரசியலைக் கட்டமைக்கும் தமிழ்த்தேசியவாதிகள் காதல் திருமணங்களின் அடிப்படையில் தமிழர்களுக்கிடையே ஏற்படும் இத்தகைய பிரிவினைகள் குறித்து ஒரு கள்ளமவுனம் சாதிப்பது கவனத்திற்குரியது. எனது அடுத்தடுத்த பயணங்களின்போது, வன்னியர் தரப்பில் சிலரையும் சந்திக்க முடிந்தது. அந்தக் கட்டப்பஞ்சாயத்தில் முக்கியப் பங்கெடுத்த ஒருவர் இப்படிச் சொன்னார் : “சீமான்லாம் பரவாயில்ல, ரொம்ப நியாயமா பேசினார். இங்க வந்தப்ப கூட, இப்போதைக்கு இதைப்பற்றி ஒன்றும் சொல்லமுடியாதுன்னு தான் சொன்னார்.”
2.இளவரசன், திவ்யா பிரச்சினையை இவ்வளவு பெரிய கலவரமாக்கியதற்கு அடிப்படை, அங்கே நடத்தப்பட்ட சாதிப் பஞ்சாயத்துகள் தான். சாதி ரீதியாக ஒருங்கிணைவது, சாதிப் பெருமை பேசுவது. பேரணி நடத்துவது ஆகியவற்றின் விளைச்சலாகத் தான் தருமபுரி கலவரம் நடந்திருக்கிறது. இந்தச் சூழலில் ‘சாதி ரீதியான ஒருங்கிணைப்பு’ என்பதை ஒரு முக்கிய விவாதப்பொருளாக்க வேண்டி இருக்கிறது.

சாதி என்பது அம்பேத்கர் சொல்லியது போல, படிநிலை ஏற்றத்தாழ்வு (Graded inequality) கொண்ட ஒன்றாக உள்ளது. அதாவது, ஒவ்வொரு சாதிக்கும் கீழாக மட்டுமல்ல மேலாகவும் ஒரு சாதி உள்ளது. எனவே தான் இங்கு பட்டியல்சாதியினர், மிகப்பிற்படுத்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் எனப் பிரித்து ஒதுக்கீடு வழங்கவேண்டி உள்ளது. இந்நிலையில் சாதிகள் தமது பிரச்சினையைப் பேசுவதற்காகக் கூடுவது, இடஒதுக்கீடு கோருவது, பேரணி அமைப்பது எல்லாவற்றையும் எப்படித் தடைசெய்ய முடியும்? இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக அமையாதா? – என்பது ஒரு கேள்வி.
ஆனால், இப்படியான ஒருங்கிணைப்புகள் தமது பிரச்சினைகளை அதன் மட்டத்தில் பேசுவதாக மட்டும் இல்லாமல் சாதிப் பெருமைகளை / “கவுரவங்களைப்” பேசுவதாகவும் உள்ளதால், அது தமக்குக் கீழாக உள்ள சாதிகளுக்கு எதிரான உறுதியாக்கமாக மாறுவதை
எப்படித் தடுப்பது என்பதுதான் இன்று நம்முன் உள்ள சவால்.

3.சாதி அடையாளத்தை ஏற்பதென்பது அரசியல் சட்ட அங்கீகாரமாகவே இருந்தாலும், இது சமூக அமைதிக்கு எதிரானதாக மாறும்போது சட்டம் இதை எப்படி எதிர்கொள்கிறது என்பதும் கவனிக்கவேண்டியது. சாதிப் பேரணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கொன்றில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 11 அன்று வழங்கிய தீர்ப்பில். சாதி அடிப்படையிலான பேரணிகள் சமூக அமைதியைக் குலைப்பதனால் அவை தடை செய்யப்படவேண்டியவை என்று கூறியுள்ளது. மேலும், தனது தீர்ப்புமுடிவை மத்திய, மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் கூட அனுப்பியுள்ளது.

இளவரசன் மரணத்தையடுத்து, தருமபுரி வந்திருந்த “பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின்” (NCSC) தலைவர் சிவண்ணாவிடம் இத்தீர்ப்பு குறித்து கேட்டபோது, “சாதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில் இத்தடை சாத்தியமற்றது” என்று சொல்லியிருந்தார். சாதி ரீதியான ஒருங்கிணைப்பை ஒரு கொள்கையாகவே அறிவித்துச் செயல்படும் மாயாவதியைத் தவிர்த்துப் பிற கட்சிகள் இத்தீர்ப்பை வரவேற்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதியரசர் மார்கண்டேய கட்ஜூ மற்றும் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டப்பஞ்சாயத்துகளுக்குத் தடைவிதிப்பது குறித்த வழக்கொன்றில் இப்படிச் சொல்லியது : “இது (கட்டப்பஞ்சாயத்து) சட்டவிரோதமானது. சந்தேகத்திற்கு இடமின்றித் துடைத்தெறியப்பட வேண்டியது. கவுரக்கொலை என்பது காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஒரு படுகொலை என்பதன்றி அதில் வேறெந்த கவுரமும் இல்லை. தனிநபரின் வாழ்வு மீது நடத்தப்படும் பிற வன்முறைகளும் கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனப்பாங்கும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டியவை.

இந்தக் கட்டப்பஞ்சாயத்துகளுக்குத் தடை விதிப்பது தான்,  இந்த சாதிய – நிலமானிய
அமைப்பு முறையை ஒழிப்பதற்கான ஒரே வழி.”
கட்டப்பஞ்சாயத்துகள் குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற நண்பராக (Amicus curie) நியமிக்கப்பட்ட, இந்திய அளவில் புகழ்பெற்ற ராஜூ ராமச்சந்திரன் தனது விசாரணைகளுக்குப் பின்பு கூறினார் : “ சாதிமறுப்புத் திருமணம் புரியும் இளம் காதலர்களைக் “கவுரவக்கொலை” செய்வதற்குக் காரணமாக இருக்கும் கட்டப்பஞ்சாயத்துகள் தடை செய்யப்பட வேண்டியவையே. அதன் உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும்.”

4. சட்டம் என்பது எழுதி முடிக்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வப்போது திருத்தப்பட வேண்டியதும் உருவாக்கப்பட வேண்டியதும் தான். சில சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளே கூட ஒரு புதிய வழிமுறையை உருவாக்கி சட்டத்தை விசாலப்படுத்தியுள்ளன. இவ்வகையில், மேலே கூறப்பட்ட சட்டவிவாதங்களின் அடிப்படையில் தமிழக அளவிலும் இப்படியான பஞ்சாயத்துகள் குறித்த உசாவலை எழுப்பவேண்டும். திருமணம் என்பது வயதுவந்த இருவரின் சுயதேர்வு உரிமை. இதில், யாரொருவர் தலையிட்டாலும் அது அரசியல் சட்டத்தின் 19 ஆவது பிரிவிற்கு எதிரானது. எனவே காதல் திருமணங்களை எதிர்ப்பது, பிரிக்க முயற்சிப்பது, கட்டப்பஞ்சாயத்து கூட்டுவது ஆகியவற்றை யாரொருவர் செய்தாலும் எந்தக் கட்சியினர் செய்தாலும் அதனை சட்டவிரோதமான கடும் குற்றமாக வரையறுத்து இவற்றைத் தடுக்க ஒரு வலிமையான சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டியது
இன்றைய முக்கியத் தேவை.

இந்தப் பக்கம் வன்னியர் ஓட்டு, அந்தப் பக்கம் தலித்கள் ஓட்டு என்பதாக அரசியல் கட்சிகள் இரட்டைக் குதிரையின் மீது சவாரி செய்வதைக் கைவிட்டு, இப்படியான சட்டங்களின் தேவைகள் குறித்து வெளிப்படையாக வாய்திறந்து பேசவேண்டும். எல்லாம் நடந்துமுடிந்த பின்பு ஓடிவந்து ஓராண்டுக்கு 144 தடை உத்தரவு போடுவது, ஒரே நபரை 3,4 முறைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அவரை “ஹீரோவாக்கி” விடுவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும்போதே நூற்றுக்கணக்கானவர்களைக் குண்டர் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்களின் கீழ் கைது செய்வது என்பவற்றைக் காட்டிலும் தொலைநோக்குச் சிந்தனையுடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இப்படியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முறையாகவும் தமிழரின் காதலை வாழவைக்கும் வழியாகவும் அமையமுடியும்.

('சமநிலைச் சமுதாயம்'  டிசம்பர் 2013 இதழில் வெளி வந்துள்ள மீனாவின் கட்டுரை. நேரடி அனுபவத்தின் அடிப்படையிலான இக் கட்டுரையின் இரண்டாம் பகுதி அடுத்த இதழில்)

நன்றி அ.மார்க்ஸ் 

இந்த தளத்தில் இடம் பெறும் எந்த கட்டுரையும் தள நிர்வாகிகளின் சொந்த கருத்துக்கள் அல்ல. அந்தந்த ஆவணங்களின் உரிமை மற்றும் கருத்துக்களுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் படைப்பாளியையே சாரும்.மேலும் இந்த தளம் எந்த லாப நோக்கத்தோடும் இயங்கவில்லை. ஆவணப்படுத்தலுக்கான ஒரு சேமிப்பு கிடங்கே இத்தளம்
உங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட admin@excludedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்
Powered by Blogger.

வகைகள்

Atrocities (3) Ayyankali (1) BBC (1) Caste discrimination (2) Conversion (1) Cuddalore (1) Daily Baskar (1) Dalitcamera (1) Devyani Kobragade (3) DICCI (1) DNA (1) Gujarat (1) Hyderabad (1) IBNLive (1) Lokpal Bill (1) Madurai (3) Protest (1) Punjab (1) READ (1) Rediff (1) SFI (1) Siddalingaiah (1) Tehelka (6) The Economic Times (2) The Hindu (10) The Indian Express (8) Times of India (8) US (1) Women (3) ZeeNews (1) அ.மார்க்ஸ் (2) அதிமுக (1) அம்பேத்கர் (3) அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்துதல் (8) அய்யன்காளி (1) அரசாணை (2) அருந்ததிய மக்கள் (2) ஆதவன் தீட்சண்யா (2) ஆம் ஆத்மி (10) ஆய்வு (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியா டுடே (1) இமையம் (1) இலக்கியம் (1) இளவரசன் (1) எவிடன்ஸ் (5) எஸ்.வி.ராஜதுரை (1) கதை (2) கரு.அழ.குணசேகரன் (1) கருத்தரங்கம் (1) கரூர் (2) கவிதை (1) கவின்மலர் (1) கன்னடா (1) காங்கிரஸ் (4) காஞ்சிபுரம் (2) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (1) கீழ் வெண்மணி (12) கீற்று (1) கொலை (2) சத்தியம் டிவி (1) சமகல்வி இயக்கம் (1) சமநிலைச் சமுதாயம் (1) சாதிய கொலைகள் (1) சிதம்பரம் (1) சென்னை (1) சோளிங்கர் (2) தந்தி டிவி (1) தருமபுரி (2) தாக்குதல் (2) தாட்கோ (1) தி இந்து (1) திண்டுக்கல் (2) திண்ணை (1) திமுக (1) திராவிடர் கழகம் (1) திருச்சி (1) தில்லி (8) திவ்யா (1) தினகரன் (2) தினத்தந்தி (1) தினமணி (5) தினமலர் (1) தீக்கதிர் (5) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) துப்புரவுத் தொழிலாளர்கள் (1) தூத்துக்குடி (2) தேர்தல் (8) தொழிலாளர்கள் (1) நக்கீரன் (1) நத்தம்காலனி (1) நரிக்குறவ (1) நாமக்கல் (1) நிலக்கோட்டை (1) பகுஜன் சமாஜ் (2) பாமக (3) பாஜக (2) பிபிசி (1) பின் நவீனத்துவம் (2) புதிய தலைமுறை (2) புதுக்கோட்டை (2) புதுச்சேரி (3) பெத்தவன் (1) பெரியார் (1) மதமாற்றம் (1) மதிப்புரை (3) மத்தியப்பிரதேசம் (1) மறியல் (1) மனுசங்கடா ! நாங்க மனுசங்கடா !! (1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மாலைமலர் (7) மீனா (1) ரவிக்குமார் (1) ராகுல்காந்தி (1) வன்கொடுமை (5) விசாரணைக்கைதிகள் (1) விசிக (5) விழுப்புரம் (1) வேலாயுதபுரம் (1) வேலூர் (4)

- Copyright © Excluded-India -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -